ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் 4 ஆவது கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு காரணமாக வாக்குப்பதிவு மந்தவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 1836 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்காம், பாரமுல்லா மாவட்டங்களில் கடும்பனிப்பொழிவு காரணமாக காலை 11 மணி வரை ஒரு வாக்காளர்கூட வாக்குப்பதிவு செய்ய வரவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்கு அருகில் உள்ள உரி தொகுதியில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கீலானியின் செல்வாக்கு மிகுந்த சோப்பூர் தொகுதியிலும் நீண்ட நேரமாக வாக்காளர்கள் யாரும் வாக்குப்பதிவு செய்ய வரவில்லை.
ஜம்முவில் உள்ள ரியாசி, உதம்பூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டத்தை காண முடிகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில் 10 பெண்கள் உட்பட 256 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 82 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்களின் தலையெழுத்தை 6,70,701 பெண்கள் உட்பட 13,99,171 வேட்பாளர்கள் நிர்ணயிக்கவுள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் முஷாஃபர் ஹூசைன் பெய்க், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் கனி வகீல், டாக்டர் முஸ்தபா கமல், குலாம் ஹசன் மிர். ஜாவித் முஸ்தபா மிர், ஹக்கீம் முகமது யாசீன், அப்துல் ரஹீம் ரதேர், குலாம் ரசூல் கார், முகமது சாஃபி உரி, தாஜ் முகைதீன் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.