இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்த ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
இருநாடுகளிடையே தற்போதுள்ள நல்லுறவை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்துப் பேசிய அதிபர் மெட்விடேவ், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பின்னர் டெல்லியில் செயல்படும் ரஷ்ய கலாசாரக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன், அதிபர் மெட்விடேவ் பங்கேற்றார்.
நாடு திரும்பினார் மெட்விடேவ்: இதற்கிடையில், 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த மெட்விடேவ் இன்று காலை 10.30 மணிக்கு நாடு திரும்புவதாக இருந்தார். ஆனால் ரஷ்யாவில் ஆன்மிகப் புரட்சிக்கு வித்திட்ட பாதிரியார் அலெக்ஸி மரணமடைந்ததால், தனது இந்தியப் பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு மெட்விடேவ் நேற்றிரவு ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக நேற்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை அதிபர் மெட்விடேவ் சந்தித்துப் பேசினார். அப்போது அணுசக்தித் துறையில் இருநாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.