புதுடெல்லி: இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 14 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உறவுகளில் ஏற்படும் விரிசல்கள், மீள முடியாத கடன் தொல்லைகள், நோய் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த தற்கொலைகள் நடப்பதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.தற்கொலை செய்துகொள்ளும் 3 நபர்களில் ஒருவர் இள வயதினர் என்றும், 5 நபர்களில் ஒருவர் குடும்பத்தலைவிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.2007
ஆம் ஆண்டில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை என்ற தலைப்பில் என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 1,22,637 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.8 விழுகாடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 1,22,367 பேர்களில் பெண்கள் மட்டும் 43,342 பேர்.மாநில வாரியாக எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிராவில் மட்டும் 15,184 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக ஆந்திர மாநிலம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 14,882 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பல்வேறு காரணங்கள் காரணமாக குடும்பமாக தற்கொலை செய்துகொள்ளுதல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 264 பேர் இந்த வகையில் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதிலும் பெண்களே அதிகம். 146 பெண்கள் குடும்பத் தற்கொலைகளில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த குடும்பத் தற்கொலைகள் கேரளாவில் கடந்த ஆண்டு அதிகம் நடந்துள்ளது. சுமார் 39 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் ஆந்திர மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 34 பேர் இது போன்று தற்கொலை செது கொண்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சனைகள், நோய் ஆகியவை காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் முறையே 23.8 மற்றும் 22.3 விழுக்காட்டினர் என்று என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கிறது.
காதல் தோல்வி உள்ளிட்ட உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக தற்கொலை செய்பவர்கள் 2.8 விழுக்காட்டினர். கடன் தொல்லை, வரதட்சணை கொடுமை காரணமாக முறையே 2.7 மற்றும் 2.6 விழுக்காட்டினர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 261 ஆக இருந்தது என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.