மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வந்தடைந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, இதுதொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இத்தாக்குதல் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க இந்தியா வந்துள்ள ரைஸ், சந்திப்புக்குப் பின்னர் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானுக்கு வலுவான வார்த்தைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என்றும் அமெரிக்க அயலுறவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் ரைஸ், அதன் பின்னர் மாலை அல்லது நாளை காலை பிரதமரை சந்திக்க உள்ளார்.
இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் செல்ல ரைஸ் திட்டமிட்டுள்ளார்.
மும்பை தாக்குதல் காரணமாக இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பதட்டத்தை தணிக்கவே ரைஸ் இந்தியா வந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.