நமது நாட்டிற்கு விடுக்கப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அரசு உறுதியான பதிலடி கொடுக்கும் என்று புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம், "நாம் விரும்பக்கூடிய மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சகிப்புத் தன்மை, திறந்த மனப்பான்மை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்" என்று மும்பை பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்டார்.
"இந்திய நாட்டிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
அரசியல் கட்சிகள் பலவாக இருந்தாலும், சூழ்நிலையைச் சந்திப்பதில் ஒன்றுபட்டு நின்றன. பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் காணப்பட்ட ஒற்றுமையை நான் வரவேற்கிறேன்" என்றார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதல்களையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் (வயது 63) புதிய உள்துறை அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.