Publish Date: Mon, 01 Dec 2008 (21:01 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (21:01 IST)
லஸ்கர் இ தயீபா இயக்க பயங்கரவாதிகள் 10 பேரும் மும்பை கடற்கரைக்கு மீன்பிடிப் படகில் வருவதற்கு முன்பாக எம்.வி. அல் ஹூசைனி என்ற பாகிஸ்தானின் வர்த்தகக் கப்பலில் பயணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் அமின் கமலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாதிகள் 10 பேரும் கராச்சி துறைமுகத்தில் இருந்து அல் ஹூசைனி கப்பலில் ஏறி மும்பை நீர்ப்பரப்பு வரை வந்ததாகத் தெரிவித்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்தியக் கடற்படையினர், கடலோரக் காவல்படையினரிடம் சிக்காமல் தப்புவதற்காக அல் ஹூசைனி கப்பலில் இருந்து இந்தியப் படகு ஒன்றில் ஏறுவது என்ற முடிவினை கடை நிமிடத்தில் தாங்கள் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மீன்பிடிப் படகில் ஏறியபிறகு அதிலிருந்த அமர்சின் என்பவரைத் தவிர -படகை ஓட்டுவதற்கு அவரை வைத்துக் கொண்டு- மற்ற நான்கு பேரையும் கொன்ற பயங்கரவாதிகள், அந்தத் தகவலைத் தங்களின் தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டானைச் சேர்ந்த ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்துள்ள கமல், புதன்கிழமை இரவு நடந்த தாக்குதலின்போது கண்காணிப்புக் கேமரா மூலம் பிடிபட்டார்.