ஜார்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நமது நாட்டின் ஆறாவது யுரேனியச் சுரங்கம் செயல்படத் துவங்கியது என்று தேசிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.
கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பக்ஜாட்டா என்ற இடத்தில் உள்ள இந்தச் சுரங்கம் ரூ.97.5 கோடி செலவில், மூன்று ஆண்டுகால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 4.21 மில்லியன் டன் யுரேனியப் படிவுகள் உள்ளன. தோண்டத்தக்க யுரேனிய இருப்பு 3.56 மில்லியன் டன்களாகும்.
நிலத்தடிச் சுரங்கமான இங்கு நாள் ஒன்றுக்கு 500 டன்கள் வீதம் தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு யுரேனியம் எடுக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் திறப்பு விழாவில் பேசிய டாக்டர் அனில் ககோட்கர், இந்தியாவில் யுரேனியச் சுரங்கங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அரசு நிறுவனமான இந்திய யுரேனியக் கழகத்தின் (Uranium Corporation of India Ltd (UCIL)) நிர்வாக இயக்குநர் ராமேந்திர குப்தா ஆகியோர், புதிய சுரங்கத்தின் மூலம் நமது நாட்டின் அணு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜடுகோரா, பாட்டின், நார்வா பஹார், டோரம்டி ஆகிய நிலத்தடி சுரங்கங்களும், பந்துராங் என்ற இடத்தில் உள்ள தரைமட்டச் சுரங்கமும் நமது நாட்டில் உள்ள பிற 5 யுரேனியச் சுரங்கங்களாகும். இவை அனைத்தும் கிழக்கு சிங்பும் மாவட்டத்திலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஆந்திரா, ராஜஸ்தான், மேகாலயா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் யுரேனியச் சுரங்கங்கள் அமைக்கும் பணியை இந்திய யுரேனியக் கழகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தச் சுரங்கங்கள் எதுவும் உற்பத்தி தகுதியை எட்டவில்லை.