மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓடுதளத்தில் தரையிறங்க முயன்ற 139 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம் தக்க சமயத்தில் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள மற்றொரு விமான நிலையமான பக்டோக்ராவில் இருந்து வந்த 'ஸ்பைஸ்ஜெட்' ஏர்வேஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 என்ற விமானத்தை 2-வது ஒடுதளத்தில் இறங்கும்படி விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்து.
இந்த தகவலை விமான ஓட்டி உறுதிப்படுத்திக் கொண்டார். எனினும் அவர் 2-வது ஓடுதளத்தில் இறங்குவதற்குப் பதிலாக தவறுதலாக பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த மற்றொரு முக்கிய ஓடுதளத்தில் விமானத்தை இறக்கி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமான ஓட்டியை உடனடியாக தொடர்பு கொண்டு அருகிலுள்ள டாக்சி-வே ஓடுதளம் வழியாக செல்லுமாறு கட்டளைப் பிறப்பித்தனர். பின்னர் விமானம் அதன் வழியாக சென்றது. இதனால் ஓடுபாதையில் ஏற்பட இருந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த முக்கிய ஓடுபாதையில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், விமானம் அந்த வழியாக சென்றிருந்தால் அதன் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.