மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தனது உள்ளூர் விமானங்களில் பயணக் கட்டணத்துடன் வசூலிக்கப்படும் எரிபொருள் கட்டணங்களில் ரூ.400 ஐ குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது 750 கி.மீ.க்கும் குறைவான தூரமுள்ள பிரிவுகளுக்கு ரூ.2,350, 750 கி.மீ.ககும் அதிகமான தூரமுள்ள பிரிவுகளுக்கு ரூ.3,100 என்றவாறு எரிபொருள் கட்டணங்களை கூடுதலாக வசூலித்து வருகிறது. இதில் சராசரியாக 14.5 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உள்ளூர் பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எரிபொருள் கூடுதல் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதால் நெரிசல் நேரத்தில் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், விமானக் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் பட்டேல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் தலைமைப் பண்பு மாநாட்டில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.