பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க ஏதுவாக நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் தகுந்த பயிற்சிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை ஆய்வாளர் பி.கே. மிஸ்ரா கூறுகையில், "எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் ஆயுதங்கள், மின்னணு உபகரணங்கள் ஆகியவற்றை நாங்கள் பெற்றுள்ளோம்." என்றார்.
"எல்லைக்கு அப்பால் இருந்து வரும் எந்தவித தாக்குதலையும் முறியடிப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். நெருக்கடியான நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப்பதற்கு எங்களுக்கு ஒரு மணி நேரம் கூட தேவைப்படாது." என்றார் அவர்.
குவஹாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் தேசியப் பேரிடர் சமாளிப்புப் படைக்கு (National Disaster Response Force (NDRF)) எந்தவிதமான நெருக்கடி நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரம்மபுத்திரா ஆற்றில் கண்காணிப்பை அதிகரிப்பதற்காக 20 நபர்கள் செல்லும் வகையிலான ஏராளமான படகுகள், இரண்டு ஹோவர்கிராஃப்ட் படகுகள் ஆகியவை வேண்டும் என்று மத்திய அரசிடம் எல்லைப் பாதுகாப்புப் படை கோரிக்கை வைத்துள்ளது என்று மிஸ்ரா தெரிவித்தார்.
இந்தியா- வங்கதேச எல்லையில் இரும்பு வேலி அமைக்கும் பணி தொடர்ந்து தடைபடுவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 40 விழுக்காடு முடிந்து விட்டதாகத் தெரிவித்தார்.