மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து மராட்டிய முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என தேஷ்முக் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று காலை சோனியா காந்தியை ஷிண்டே சந்தித்துப் பேசினார். எனினும் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எந்தக் கருத்தையும் தற்போது தெரிவிக்க முடியாது என ஷிண்டே மறுத்து விட்டார்.
காங்கிரஸ் கட்சியில், சோனியாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழும் முக்கிய தலைவர்களில் சுஷில்குமார் ஷிண்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ப்ரித்விராஜ் சௌஹான் மராட்டியத்தின் முதல்வராக நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் விதமாக கட்சியின் முக்கிய பிரமுகர்களை ப்ரித்விராஜ் சௌஹான் சந்தித்து வருகிறார்.
மராட்டியத்தின் முதல்வரை தேர்வு செய்வதற்காக உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சரும், மராட்டிய கட்சி விவகாரத்திற்கு பொறுப்பாளருமான ஏ.கே.அந்தோணி, மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி, அங்கு (மராட்டியம்) கூட்டணி ஆட்சி நடந்து வருவதால் இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடனும் விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே, இத்தருணத்தில் நான் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது.
இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புதிய முதல்வர் குறித்து முடிவு செய்யப்பட்டுவிடும் என்றார்.