பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்துள்ள பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதம் ஒரு முக்கியப் பிரச்சனை என்று குறிப்பிட்டதுடன், அதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாத பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி எந்தவித அரசியல் ஆதாயத்தையும் தேடவில்லை என்ற அவர், "இந்தச் சிக்கலான நேரத்தில் நாங்கள் சாதி, மதம், அந்தஸ்து போன்ற அனைத்தையும் கடந்து நிற்போம்" என்றார்.
காங்கிரஸ் ஒரு மதசார்பற்ற கட்சி என்ற பிரதமர், நாம் எந்த மதத்தையும் சார்ந்தவராக இருக்கலாம், எந்த சாதியையும் சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள் என்றதுடன், பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் பயங்கரவாதத்தை முன்வைத்து நாட்டைத் துண்டாட முயற்சி செய்கின்றன என்று குற்றம்சாற்றினார்.
"காங்கிரஸ் கட்சி எல்லா மதத்தினரையும் சமமாகப் பாவிக்கிறது. எனவே இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் கூட பாதுகாப்பாக உணர்கின்றனர். மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோருக்கு மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கின்றனர்." என்றார் பிரதமர்.