மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்கள் குறித்த விசாரணையில் நமது அமைப்புக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் (Federal Bureau of Investigation (FBI)) அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது.
ஒன்பது பேர் கொண்ட இக்குழுவினர் நேற்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால், அவர்கள் கைத் துப்பாக்கிகளுடன் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததால் சுங்க அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், புது டெல்லியில் உள்ள மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்த பிறகு, சுமார் 6 மணி நேரம் கழித்தே அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள் விரைவில் மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவதுடன், தாக்குதல் நடந்த இரண்டு நட்சத்திர விடுதிகள், நாரிமேன் குடியிருப்பு, சி.எஸ்.டி. இரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.