மும்பையில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த தாஜ் விடுதி வளாகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த 2 ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளை கண்டுபடித்த வெடிகுண்டு செயலிழப்பு படை வீரர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து அழித்தனர்.
இதுகுறித்து இன்று வெளியான தொலைக்காட்சி செய்தியில், கடந்த புதனன்று இரவு பயங்கரவாதிகள் தாஜ்மஹால் நட்சத்திர விடுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அங்கு குவிந்த வெடிகுண்டு செயலிழப்பு படை வீரர்கள், விடுதிக்கு அருகே உள்ள பகுதியில் இருந்த 2 வெடிகுண்டுகளை செயழிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு வெடிகுண்டில் 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தாஜ் விடுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு டைமர்-பாம் எனப்படும் ரகத்தைச் சேர்ந்தது.
இந்த வெடிகுண்டில் உள்ள டைமர் சாதனைத்தைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 8 நிமிடம் 32 நொடிகளில் இருந்து அதிகபட்சமாக 194 நாட்கள் வரையிலான கால கட்டத்திற்குள் இதனை வெடிக்கச் செய்ய முடியும் என்றார்.
இதேபோல் ஓபராய் நட்சத்திர விடுதி வாயிலில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் முன்பாகவே வெடித்துச் சிதறியது. எனினும், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.