ஊடுருவல் அதிகமுள்ள திரிபுரா எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், 856 கிலோ மீட்டர் நீளம் உள்ள இடைவெளியைக் கம்பி வேலியிட்டுப் பாதுகாக்கும் நடவடிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், 'மேம்பாட்டை முறியடிக்கும் நடவடிக்கைகள்' என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் மீதும், கட்டுமானத் தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம், மாநிலத்தில் நடந்துவரும் வளர்ச்சிப் பணிகளை முடக்கிவிட தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
"இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் களமாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் வங்காள தேசத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்வதோடு, பயங்கரவாதத்திற்கு எதிராக பொது மக்கள் பெருமளவில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறுகிறது.
திரிபுரா- வங்காள தேச எல்லையில் வேலி அமைக்கும் பணி 80 விழுக்காட்டிற்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், மிகவும் கடினமான மலைப் பகுதிகள், வனங்களில் மட்டும் வேலி அமைக்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 856 கிலோ மீட்டர் நீளத்திற்கு இடைவெளி உள்ளது.
வேலி அமைக்கும் பணிகளுக்காக 1,118.23 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கொடுத்துள்ளது. இதற்கான இழப்பீடான ரூ.16.47 கோடியில் ரூ.14.01 கோடியை 10,072 பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.