மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கூட பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளன. ஆனால் அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை மட்டும் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் நடத்தும் எதிர்பாராத தாக்குதல்களில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவாவது ஈடுகட்டும் வகையில் 'பயங்கரவாதக் காப்பீட்டுத் திட்டம்' (terrorism insurance cover) என்ற ஒன்று இன்னும் நமது நாட்டில் செயல்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"அமெரிக்கா, பிரிட்டன் போல, நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் எதுவும் இல்லை. இருந்தாலும், பெரும்பாலான உயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் (life insurance products), பாலிசி எடுத்து 'ஒரு ஆண்டிற்குள்' பயனாளர் தற்கொலை செய்து கொண்டால் தவிர, 'வேறு எந்தக் காரணங்களால்' இறப்பு நேரிட்டாலும் அவருக்குரிய காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று விதிமுறை உள்ளது.
எனவே பயங்கரவாதத் தாககுதல்களில் பலியானவர்களை, 'பாலிசி எடுத்து ஒரு ஆண்டிற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டவர்கள்' என்ற வகையில் கொண்டுவந்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படலாம்" என்று கோடேக் உயிர்க் காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ காப்பீட்டுப் பாலிசியுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டமாக (add-on policy) பயங்கரவாதத்திற்கு எதிரான காப்பீட்டுத் திட்டத்தைப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் (General insurance companies) வழங்குகின்றன.
"உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, பெரும்பாலான நிறுவனங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகக் காப்பீடு வழங்க மறுத்தன. பிறகு, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக ஒரு பிரிவை உருவாக்கின. அதுமுதல் பயங்கரவாதக் காப்பீட்டுத் திட்டங்களில் பெறப்படும் பிரீமியம் தொகை முழுவதும் வசூலிக்கப்பட்ட பிறகு அந்தப் பாலிசியை புதுப் பிரிவின் கீழ் சேர்த்தன. (பிரீமியம் முழுவதையும் கட்டினால்தான் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்) " என்று அல்மோன்ட்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி வினித் வித்யார்த்தி கூறினார்.
இதன்படி இந்த ஆண்டு மட்டும் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1.3 கோடியை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.1 கோடியாக இருந்தது.
பெரும்பாலான நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் காட்டி (terms and conditions) காப்பீட்த் தொகையை வழங்க மறுத்து விடுகின்றன என்றார் வித்யார்த்தி.