மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஷ்முக், கடந்த சனிக்கிழமையன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திலேயே ராஜினாமா செய்யத் தயார் எனத் தெரிவித்து விட்டதாகவும், இவ்விவகாரத்தில் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக இன்று காலை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த அம்மாநில துணை முதலமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், விலகல் கடிதத்தை முதல்வர் தேஷ்முக்கிடம் சமர்ப்பித்தார்.
அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக இன்று நண்பகலில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று தேஷ்முக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேஷ்முக் பதவி விலகல் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் புதிய முதலமைச்சர் இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்படுவார் எனக் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.