தொடர் குண்டுவெடிப்பு போன்ற செயல்களை விசாரிக்கவும், பயங்கரவாதிகளை ஒடுக்கவும் புதிய மத்தியப் புலனாய்வு அமைப்பு (பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி) உருவாக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்தது.
இதில் கடல், ஆகாய மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க அவ்வழிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேசிய பாதுகாப்புப்படை என்ற அதிரடிப்படையின் துணை மையங்களை நாட்டின் வேறு நான்கு பகுதிகளிலும் புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், பயங்கரவாதிகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நாம் ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் கண்ணோட்டங்களுக்கு இடம் தரக் கூடாது.
நம்முடைய தாக்குதல்கள் இந்தியர்களைப் பிரிப்பதற்குப் பதில் ஒற்றுமைப்படுத்தத்தான் உதவுகிறது என்று நமது எதிரிகளும், பயங்கரவாதிகளும் உணர வேண்டும். இந்தக் கொடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம்முடைய நிர்வாக அமைப்பில் என்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று கருத்தொற்றுமை காணும் வகையில் யோசனைகளைத் தெரிவிக்க வேண்டும்.
எதிரிகள் நம்மைத் தாக்கும் இந்த வேளையில் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு நாம் வழங்க வேண்டும். மக்களுடைய கோபத்தையும், வேதனையையும் அரசு உணர்ந்திருக்கிறது.
நிர்வாக சீர்திருத்த கமிஷன்கள் செய்த பரிந்துரை அடிப்படையில் புதிதாக மத்தியப் புலனாய்வு அமைப்பு ஒன்றைத் தொடங்க சட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.
பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் வலுப்படுத்தப்படும். மிகக்குறுகிய நேரத்தில் சம்பவ இடத்துக்கு வீரர்கள் வரும் வகையில் நாட்டின் நாலா புறங்களிலும் புதிய தளங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவர்.
கடல் வழியாகவும் வான் வழியாகவும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க காவலையும் கண்காணிப்பையும் வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இதில் கடற்படை, கடலோரக் காவல் படை, கடலோர மாநிலங்களின் காவல் படைகள், விமானப் படை, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது.
மும்பையைத் தாக்க வந்தவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், நவீன ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். நகரின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை அழிப்பதும், ஏராளமான உயிர்களைப் பலிவாங்குவதும் அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கிறது. மும்பை அனுபவித்த வேதனை முடிவுக்கு வந்துவிட்டது.
இந்தச் சண்டையில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்துக்கு ஈடு இணையில்லை, என்னதான் நாம் உதவி செய்தாலும் அவர்களுடைய விலைமதிப்பற்ற உயிருக்கு அது ஈடாகிவிடாது என்றார் மன்மோகன் சிங்.