மராட்டிய தலைநகர் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கூட்டத்திற்கு பின்னர் ஆர்.ஆர்.பாட்டீல் தனது ராஜினாமா முடிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஆர்.ஆர்.பாட்டீல் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர்.பாட்டீலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு, அக்கட்சியின் தலைவர் சரத்பவார், முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல்களால் மன வருத்தத்திற்கு உள்ளா ஆர்.ஆர்.பாட்டீல் கடந்த 3 தினங்களுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை என்னிடம் தெரிவித்ததாகவும் சரத்பவார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தனது பதவியை இன்று ராஜினாமா செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.