மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் கூட்டிய கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டீல் அழைக்கப்படவில்லை.
பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, உயிரிழப்பு, பாதுகாப்பு குறைபாடு, எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க முப்படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.
இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் உளவுத் துறை அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார் என்றும், இந்த தாக்குதலுக்கு பின்னணி என்ன என்பது குறித்தும், இதுபோன்று மேலும் நடவாமல் தடுக்கும் வழிகள் பற்றியும் அப்போது பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய சந்திப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டில் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதலை கையாண்ட விதம் பிரதமருக்கு அதிருப்தி அளிப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் பாதுகாப்புச் செயலர் விஜய் சிங், கப்பற்படை தலைமை அதிகாரி சுரீஷ் மேஹ்தா, ஐஏஎ·ப் தலைமை அதிகாரி, உளவுத் துறை அமைப்பின் தலைவர் பி.சி. ஹால்டர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் வணிக நகரமான மும்பை நகருக்குள், கடல் வழியாக பயங்கரவாதிகள் எவ்வித தடையும் இன்றி எளிதாக உள்ளே நுழைந்துள்ளனர். அதிலும் மிகவும் முக்கியமான இடங்களான தாஜ் ஹோட்டல், ஓபராய் டிரிடண்ட், நாரிமன், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தி சுமார் 195 பேரின் உயிரை கொன்று குவித்துள்ளனர். 295 பேர் படுகாயமடைந்துள்ளனர்.