மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிருடன் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது.
மும்பையில் தாஜ் ஹோட்டல், டிரிடண்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரவாதிகளில் ஒருவனைத் தவிர அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட பயங்கரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜப். 21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவன். இவனுடன் மேலும் 10 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவி வந்துள்ளனர்.
சிலர் கொலாபா சந்தைப் பகுதியில் வீடு எடுத்து தங்கினர். சிலர் தாஜ் ஹோட்டலிலேயே அறை எடுத்து தங்கி ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பதுக்கினர்.
திட்டமிட்டப்படி 26-ந் தேதி இரவு பத்து குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அஜ்மல் தனது கூட்டாளி இஸ்மாயிலுடன் கொலாபா பகுதியில் தாக்குதல் நடத்த வந்திருந்தான். எந்திர துப்பாக்கியுடன் வந்த அஜ்மல் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் மும்பை அதிரடிப்படை தலைவர் ஹேமந்த் கார்க்கரே, என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், மற்றொரு அதிகாரி அசோக் காம்தே ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர் கார்க்கேயின் குவாலிஸ் காரில் அஜ்மலும், இஸ்மாயிலும் தப்பியுள்ளனர். மெரைன் டிரைவ் என்ற இடத்தில் சென்றபோது கார் நின்று விட்டது. உடனே இருவரும் எதிரே மற்றொரு காரில் வந்து கொண்டிருந்த மும்பை வியாபாரிகள் கரண் ரமேஷ், ஆர்ஷா ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களது `கோடா' காரில் தாக்குதலுக்கு பறந்தனர். தனது காரை தீவிரவாதிகள் பறித்துச் சென்றது பற்றி ஆர்ஷா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதற்குள் காரில் தப்பிச் சென்ற 2 பயங்கரவாதிகளைப் பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது சவுபாதி சதுக்கம் அருகில் கோடா கார் வருவதைக் கண்டு காவல்துறையினர் காரை மடக்கினர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் பயங்கரவாதிகளை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பயங்கரவாதிளும் குண்டு மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பயங்கரவாதி இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டது தெரிய வந்தது. அஜ்மலுக்கு அறுவை சிகிச்சை மூலம் அவன் மார்பில் பாய்ந்து இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜ்மலிடம் தீவிரவாத தடுப்பு படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பரீத்கோட், முகாபராபாத் ஆகிய இடங்களில் தீவிரவாத பயிற்சி பெற்றான் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனுக்கு கடலுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.