Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5,000 பேரைக் கொல்லும் வெடிபொருட்களுடன் வந்தனர்: மராட்டிய துணை முதல்வர்!

5,000 பேரைக் கொல்லும் வெடிபொருட்களுடன் வந்தனர்: மராட்டிய துணை முதல்வர்!
, சனி, 29 நவம்பர் 2008 (19:09 IST)
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் மார்க்கமாக வந்த மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், 5,000 பேரை கொன்று குவிக்கும் அளவிற்கு ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் வந்தனர் என்று மராட்டிய மாநில துணை முதலமைச்சர் ஆர்.ஆர் பட்டீல் கூறியுள்ளார்.

மும்பையில் இன்று மராட்டிய மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஆர்.பட்டீல், மிகவும் ஆழமாக சதித் திட்டம் தீட்டப்பட்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இதுவென்றும், இதில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளும் 4 குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தாஜ் நட்சத்திர விடுதிக்குள் 4 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், ட்ரைடண்ட் நட்சத்திர விடுதி, நாரிமேன் இல்லம், சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் ஆகியவற்றில் இரண்டு பயங்கரவாதிகள் கொண்ட குழுக்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.

மும்பைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், மொஹம்மது அஜ்மல் காசம் என்ற ஒரு பயங்கரவாதி பிடிபட்டுள்ளதாகவும், அவனிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தேச பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 350 காவலர்களும், இராணுவ, ஆயுதப் படைகளைச் சேர்ந்த மேலும் 400 காவலர்களும் இணைந்து ‘ஆபரேஷன் பிளாக் டோர்னடோ’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை 59 மணி நேரத்திற்குப் பிறகு முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

ஜி.பி.எஸ். கருவியுடனும், செயற்கை‌க்கோள் வாயிலாக இயங்கும் தொலைபேசியுடனும் வந்த பயங்கரவாதிகள் இடையிடையே பாகிஸ்தானி்ல் உள்ள தங்களுடைய தொடர்புகளுடன் பேசியுள்ளனர் என்று கூறிய பட்டீல், இத்தாக்குதலில் 18 அயல்நாட்டினர் உட்பட 195 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதுவரை 195 உடல்கள் வந்துள்ளதாகவும், இன்னமும் பல சடலங்கள் கொண்டு வரப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil