டெல்லி மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5.00 மணியுடன் முடிந்த வாக்குப் பதிவில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததால் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும் என்று டெல்லி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மாநிலச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 70 இடங்களில் 69 இடங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடந்தது. மீதமுள்ள ஒரு தொகுதியான ராஜேந்திர நகரில் டிசம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலையில் மந்தமாகத் துவங்கிய வாக்குப் பதிவு பின்னர் விறுவிறுப்படைந்தது. பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு எல்லா வாக்குச் சாவடிகளிலும் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் தொகுதியான புது டெல்லியில் 4.30 மணி வரை 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 53 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தேர்தலில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் வி.கே. மல்ஹோத்ரா உள்பட 863 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக பதவி வகித்து வரும் ஷீலா தீக்ஷித், இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டுத் தலைநகர் முழுவதும் 52 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.