மும்பையில் பயங்கரவாதிகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதை அடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பது குறித்து முப்படைத் தளபதிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் நுழைந்துள்ள பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிப்பதையடுத்து, நமது நாட்டு எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்துத் தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங், உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா, ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர், கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, விமானப்படைத் தளபதி ஏர் மார்சல் ஹோமி மேஜர், கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர், புலனாய்வுத் துறை இயக்குநர் பி.சி.ஹல்தார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அமைப்புக்களின் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று தனியாக ஆலோசனை நடத்தினார்.