மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை விடுதி நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் விடுதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரேமன்ட் பிக்ஸன் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம்.
எனினும், தாஜ் விடுதி ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.
தாஜ் நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த மேலும் 3 பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இன்று நண்பகலுக்கு முன்னர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, விடுதிக்கு ஏற்பட்ட சேதங்களை ரத்தன் டாடா நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக, தாஜ் விடுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், விடுதியில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அந்த ஊழியர் கடந்த 10 மாதங்களாக தாஜ் விடுதியில் பணியாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.