பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) நிலையத்தை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தோனேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கவனத்திற்கு இந்தப் பரிந்துரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்தப் பரிந்துரை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான சிறப்புப் பயிற்சிகளை பெற்றுள்ள என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கான கால தாமதத்தை குறைப்பது அவசியம். எனவே அச்சுறுத்தல் நிறைந்த நகரங்கள், பெரு நகரங்களில் நிரந்தர என்.எஸ்.ஜி. நிலையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.
தற்போது தலைநகர் டெல்லியில் இருந்து மட்டுமே என்.எஸ்.ஜி. படையினர் இயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.