மும்பையில் கடந்த 62 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தாஜ் நட்சத்திர விடுதி இன்று நண்பலுக்கு முன்பாக பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.
காலை 7.45 மணியளவில் தாஜ் நட்சத்திர விடுதியில் வெடிச் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து கீழ் தளத்தில் தீ ஜுவாலைகள் தென்பட்டன. விடுதிக்குள் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
அதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் விடுதிக்குள் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தேசிய காவல்படையின் தலைமை இயக்குனர் ஜே.கே.தத் இன்று காலை 10.20 மணியளவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், விடுதியின் ஒவ்வொரு அறையிலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னரே விடுதி பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கூற முடியும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.