மும்பையில் இன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த கடும் மோதலில் தேசப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட 2 கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 கமாண்டோக்கள் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் தாஜ் மஹால் நட்சத்திர விடுதி, நாரிமேன் குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தேசப் பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி.) கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தாஜ் நட்சத்திர விடுதியில் இன்று காலை நடந்த மோதலில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் (வயது 31) கொல்லப்பட்டார் என்று என்.எஸ்.ஜி. பேச்சாளர் தெரிவித்தார்.
நாரிமேன் குடியிருப்பில் நடந்த மோதலில் கமாண்டோ சந்தர் என்பவர் கொல்லப்பட்டார் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாரிமேன் குடியிருப்பு, ஓபராய் டிரைடண்ட், தாஜ் மஹால் ஆகிய மூன்று இடங்களில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ஆறு கமாண்டோக்கள் காயமடைந்துள்ளனர்.
மோதலில் கொல்லப்பட்டுள்ள மேஜர் உன்னிகிருஷ்ணன் பெங்களூருவைச் சேர்ந்தவர். 2007 இல் தேசப் பாதுகாப்புப் படையில் பொறுப்பேற்ற இவர் பல்வேறு பயங்கரவாத முறியடிப்புத் தாக்குதல்களில் தலைமையேற்றுள்ளார்.
இவரது தந்தை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) பணியாற்றி வருகிறார்.