மும்பையில் டிரைடண்ட் ஓபராய் நட்சத்திர விடுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் முடிந்துவிட்டதாகவும், இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசியப் பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி) தெரிவித்துள்ளனர்.
விடுதியில் இருந்து 24 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் என்.எஸ்.ஜி. தெரிவித்து உள்ளது.
வடக்கு மும்பையில் உள்ள டிரைடண்ட் ஓபராய் நட்சத்திர விடுதியில் சுமார் 40 மணி நேரமாக நீடித்த மோதலிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய என்.எஸ்.ஜி. தலைமை இயக்குநர் ஜே.கே.தத், "ஓபராய் விடுதி தற்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாங்கள் தற்போது ஒவ்வொரு அறையாகச் சென்று தேடி வருகிறோம். பிணையக் கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்." என்றார்.
பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், இவை விரைவில் செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தாஜ் நட்சத்திர விடுதி, நாரிமேன் குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இறுதிக்கட்டத் தாக்குதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.