மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் அல் காய்டா இயக்கம் திட்டமிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளும், பயங்கரவாத வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.
"கடல் வழியாக வந்துள்ள பயங்கரவாதிகள் அல் காய்டாவின் (புளூ பிரிண்ட்) திட்டத்தை பின்பற்றியுள்ளனர். அல் காய்டாவின் திட்டத்தை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். இதுதான் இந்தியாவில் நடந்துள்ளது" என்று லண்டனைச் சேர்ந்த பயங்கரவாத வல்லுநர் ஜார்ஜ் காஸிமெரிஸ் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக அல் காய்டா அமைப்பு திட்டங்களை வகுத்துள்ளது. அதைப் பின்பற்றி வெவ்வேறு அமைப்புக்கள், வெவ்வேறு நபர்கள் உலகம் முழுவதிலும் தாக்குதல்களை நடத்தி வருவதை நாம் பார்க்கிறோம்." என்றார் அவர்.
நீண்டகாலத் திட்டங்கள், கோரிக்கைகள், எச்சரிக்கைகள் என எதுவுமின்றி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் வழக்கமாக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் நுழைந்துள்ள பயங்கரவாதிகள் கூட அமெரிக்கர்கள், பிரிட்டிஷார் ஆகியோரை மட்டுமே குறிவைத்துத் தேடி பிணையக் கைதிகளாக்கியுள்ளனர். எனவே, உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதும் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்துள்ளது. தவிர தங்களால் முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பியுள்ளனர் என்றார் காஸிமெரிஸ்.
இவர் தற்போது வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் முன்னாள் மூத்த இயக்குநரும், சி.ஐ.ஏ.வின் மூத்த அதிகாரியுமான புரூஸ் ரீடல், "மும்பைத் தாக்குதல்களில் அல் காய்டாவுடன் இணைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தாயிபா இயக்கத்திற்குத் தொடர்பிருக்கலாம். அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடனும் தொடர்பிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது. குறிப்பாக மும்பைக்கு அதிக அச்சுறுத்தல் உள்ளது" என்றார்.