Publish Date: Thu, 27 Nov 2008 (21:34 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (21:04 IST)
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று நடந்த வாக்குப் பதிவில் 64 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடியும் நேரத்திலும் ஏராளமானோர் வாக்களிக்க வந்துள்ளதால் வாக்குப் பதிவு விழுக்காடு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
தேர்தல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தேர்தல் ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன், ஒருசில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது என்றார்.
இன்னும் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது. அவை உடனடியாக மாற்றப்பட்டன என்றார் அவர்.
மேலும், 8 தொகுதிகளில் 8 வாக்குச் சாவடிகளில் உள்ளூர்ப் பிரச்சனை காரணமாகப் பொது மக்கள் வாக்களிக்க வரவில்லை என்ற பாலகிருஷ்ணன், இரண்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவின்போது மரணமடைந்ததாகவும், அவர்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் 221 பெண்கள், 1371 சுயேட்சைகள் உள்பட 3,179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியினரும் 230 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை 228 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 187 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் 21, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13, சிவசேனா 28, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4, பாரதிய ஜனசக்தி 197, தேசியவாத காங்கிரஸ் 2, மற்றவை 672 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
முதல்வர் சிவராஜ் சிங் செளகான், முன்னாள் முதல்வர் பாபுலால் கார், பேரவைத் தலைவர் ஈஸ்வர்தாஸ் ரோஹினி, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர், 24க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்கள் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
Webdunia
Publish Date: Thu, 27 Nov 2008 (21:34 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (21:04 IST)