மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகச் சில தடயங்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவராஜ் பாட்டீல், "எங்களிடம் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவை பற்றித் தற்போது எதையும் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவித்தால் அது நடந்து வரும் மோதல்களைப் பாதிக்கலாம்" என்றார்.
இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மன்மோகன் சிங் மும்பை செல்லவுள்ளார் என்று தெரிவித்த பாட்டீல், மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்- உடன் பிரதமர் எப்போதும் தொடர்பில் உள்ளார் என்றார்.
"மராட்டிய அரசிற்குத் தேவையான உதவிகளை மேலும் அதிகரிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மும்பை காவல்துறையினருக்கு உதவியாகத் தேசியப் பாதுகாப்புப் படையினர், கடற்படை கமாண்டோக்கள் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்." என்றார் அவர்.
முன்னதாக மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சரவை, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தது.
மேலும், பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்டோர் பற்றி அமைச்சரவையில் சிறப்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.