மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரெஞ்சு நாட்டு அணு விஞ்ஞானி எம். ஜார்ஜ் வென்ட்ரியேஸ், அவரின் மனைவி ஆகியோர் பயங்கரவாத தாக்குதலிற்கு உள்ளான கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர்.
தற்போது 88 வயதாகும் விஞ்ஞானி ஜார்ஜ் வென்ட்ரியேஸ், இந்திய அணுக் கழகம் (Indian Nuclear Society) வழங்கும் சிறந்த விஞ்ஞானி விருதைப் பெறுவதற்காக மும்பைக்கு வந்துள்ளார் என்று அணு சக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானியும் அவரின் மனைவியும் தங்கியிருந்த அறையைச் சுற்றிவளைத்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதலையடுத்து, அவர்களை விடுவித்துப் பின்வாங்கினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இன்று காலை அணு சக்தித் துறை அதிகாரிகளிடம் பேசிய விஞ்ஞானி ஜார்ஜ் வென்ட்ரியேஸ், தானும் தனது மனைவியும் நலமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அணுசக்தி நகரில் இந்திய அணு எரிசக்திக் கழக அலுவலகத்தில் (Nuclear Power Corporation of India) நடக்கவுள்ள இந்திய அணுக் கழக மாநாட்டில் விஞ்ஞானி ஜார்ஜ் வென்ட்ரியேசிற்கு விருது வழங்கப்படவுள்ளது.