மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவலறிந்து அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும் தோல்வியடைந்து விட்டன என்று குற்றம்சாற்றியுள்ள இடதுசாரிகள், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று கூறியுள்ளன.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோர், டிசம்பர் 10 ஆம் தேதி கூடவுள்ள மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என்றனர்.
யு.என்.ஐ. நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசியுள்ள பாசுதேவ் ஆச்சார்யா, "இது மிகவும் முக்கியமான பிரச்சனை. நமது புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நமது அரசின் செவிட்டுக் காதுகள் அதை கவனிப்பதில்லை." என்று குற்றம்சாற்றினார்.