Publish Date: Thu, 27 Nov 2008 (13:37 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (13:37 IST)
மத்தியப் பிரதேசத்தில் 13 ஆவது சட்டப் பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்காக, 50 மாவட்டங்களில் பரவியுள்ள 230 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
இந்தத் தேர்தலில் 221 பெண்கள், 1,371 சுயேட்சைகள் உள்பட 3,179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை 47,214 வாக்குச்சாவடிகளில் 3 கோடியே 63 லட்சத்து 4 ஆயிரத்து 152 வாக்காளர்கள் தங்களின் வாக்குக்களைப் பதிவு செய்து நிர்ணயிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியினரும் 230 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை 228 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 187 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் 21, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13, சிவசேனா 28, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4, பாரதிய ஜனசக்தி 197, தேசியவாத காங்கிரஸ் 2, மற்றவை 672 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
முதல்வர் சிவராஜ் சிங் செளகான், முன்னாள் முதல்வர் பாபுலால் கார், பேரவைத் தலைவர் ஈஸ்வர்தாஸ் ரோஹினி, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர், 24க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்கள் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
பெரும்பாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் நடந்து வரும் இந்தத் தேர்தலில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ள வாக்குப் பதிவிற்கு 262 அணிகள் பாதுகாப்புப் படையினரைத் தேர்தல் ஆணையம் குவித்துள்ளது. சுற்றியுள்ள மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 27 Nov 2008 (13:37 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (13:37 IST)