தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் போன்ற ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் மும்பை நகரமே பீதியில் உறைந்துள்ளது.
மும்பை நகரின் முக்கிய ரயில் நிலையமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு 10.33 மணிக்கு முன்பதிவு பகுதி வழியாக ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் சில பயங்கரவாதிகள் வந்தனர்.
பின்னர், பயணிகள் ஓய்வறைக்குள் நுழைந்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டதோடு கையெறி குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் இங்கு மட்டும் 10 பேர் பலியானார்கள்.
இதேபோல், மாசேகான் என்ற இடத்தில் டாக்சியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியானார்கள். தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு வேலை பார்த்து வந்த 3 தொழிலார்கள் பலியானார்கள்.
ஓபராய் ஓட்டலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அந்த ஓட்டல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 8 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல் காரணமாக மும்பை நகரமே பீதியில் உறைந்துள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்பட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.