தெற்கு மும்பையில் உள்ள கொலாபா மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 5 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு மும்பையின் பல்வேறு இடங்களில் இன்றிரவு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. டிரிடன்ட் ஓட்டல் அருகே 2 குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வில்லே பார்லே என்ற இடத்தில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், சாந்தா குரூஸ் பகுதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபராய் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததாகவும், கொலாபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலர் படுகாயமடைந்ததாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
கொலபா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை உறுதி செய்த காவல்துறை கூடுதல் ஆணையர் தேவன் பாரதி, இதுபற்றி விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. சத்ரபதி சிவாஜி டெர்மினசை சுற்றி பாதுகாப்பு வளையத்த ஏற்படுத்தியுள்ள காவல்துறையினர் அங்கு யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த 2 நபர்கள் கையில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சுடும் சத்தம் தற்போதும் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், இதனால் ரயில் நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் கூடியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.