பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலிப்பது குறித்து முடிவெடுக்க பெட்ரோலிய அமைச்சகம் அமைச்சரவையை அணுகவுள்ளது.
இதுகுறித்துப் பொருளாதார இதழ்களின் ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய பெட்ரோலிய செயலர் ஆ.எஸ். பாண்டே, "பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விற்பனையில் லாபம் கிடைக்கத் துவங்கியிருப்பது உண்மைதான். ஆனால் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனையில் பெருத்த நஷ்டமே நீடிக்கிறது." என்றார்.
"முடிவெடுப்பதற்கு முன்பு இந்த விடயங்களை எல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், தேவையான முடிவை உரிய நேரத்தில் எடுப்பதற்காக, அதற்கான அமைச்சரவைக் குழுவை அணுகவுள்ளோம்." என்றார் அவர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சில்லறை விற்பனையில், பெட்ரோல்- லிட்டருக்கு ரூ.8.17, டீசல்- லிட்டருக்கு 0.65 என்றவாறு லாபம் ஈட்டுகின்றன. ஆனால் மண்ணெண்ணெய்- லிட்டருக்கு ரூ.21.54, சமையல் எரிவாயு- சிலிண்டருக்கு ரூ.330.28 என்றவாறு இழப்பைச் சந்திக்கின்றன என்றார் அவர்.
தவிர இந்த மூன்று நிறுவனங்களும் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.14,431 கோடி இழப்பைச் சந்தித்த. இந்த ஆண்டின் இறுதியில் எரிபொருள் விற்பனையில் ரூ.1,10,000 கோடி இழப்பைச் சந்திப்போம் என்று எதிர்பார்க்கின்றன என்றார் பாண்டே.