சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் டிசம்பர் 24க்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்கக்கூடும் என்ற அறிவிப்பைத் தவறு என்று தெரிந்து தான் வெளியிடவில்லை என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி விலை குறைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பா.ஜ.க. அளித்துள்ள புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தியோரா, "இதனால் நான் நிலைகுலைந்துள்ளேன். நான் எதையும் தெரிந்து செய்யவில்லை." என்றார்.
"பொது வாழ்க்கையில் நான் 45 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒன்பது தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இதற்கு முன்பு எந்தத் தாக்கீதும் எனக்கு அனுப்பப்பட்டதில்லை." என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்துக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஏதாவது எழுதியுள்ளீர்களா என்று கேட்டதற்கு, "அந்த விவரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை" என்றார் தியோரா.
ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விலைக் குறைப்பு அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றியிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமியிடம் பா.ஜ.க. புகார் அளித்ததன் பேரில், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் விளக்கம் கேட்டுத தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.