சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பு குறித்து விளக்கம் கேட்டு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிற்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
"சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனக்கும் அதே கருத்து இருந்தாலும், டிசம்பர் 24க்கு முன்பு விலைக் குறைப்பு குறித்து முடிவெடுக்க முடியாது" என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியிருந்தார்.
ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விலைக் குறைப்பு அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றியிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமியிடம் பா.ஜ.க. புகார் அளித்ததன் பேரில், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் விளக்கம் கேட்டுத தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.