பயங்கரவாத பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பி அதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றியுள்ளார்.
மேலும், மத்திய அரசிற்குப் பாடம் சொல்கிறதை விட்டுவிட்டுத் தனது கூட்டாளி அமைப்புகளைக் கட்டுப்படுத்த பா.ஜ.க. முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராஜஸ்தானில் பெஹ்ரோர் நகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெட்டிபா கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் எழுப்புவதற்கு பயங்கரவாதம் ஒன்றைத் தவிர வேறு எந்த சமூகப் பிரச்சனையும் எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் இல்லை. பயங்கரவாத பிரச்சனையின் மூலம் நமது நாட்டைப் பிளவுபடுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். தேச ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் அவர்கள் சீண்டிப் பார்க்கின்றனர்.
பயங்கரவாதம் பற்றிப் பேச அவர்களுக்கு என்ன தைரியம்? அவர்கள் தலைவர்தான் கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தின்போது ஆஃப்கானிஸ்தானிற்கு பயங்கரவாதிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்தது.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை ஆனால் அது இந்த நாட்டின் மோசமான எதிரி... பா.ஜ.க. வினர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லும் முன்பு தங்களுடைய கூட்டாளி அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சுயநலவாதிகளான அவர்கள் நக்சலைட்டு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்... அவர்கள் ஆளும் மாநிலங்களில்தான் நக்சலைட்டு நடவடிக்கைகள் அதிகமாகவுள்ளன.
இவ்வாறு சோனியா பேசினார்.