எந்த அடிப்படையில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை விளக்கிடுமாறு மத்திய அரசிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.
டெலகாம் வாச்டாக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், எந்த ஒரு நடைமுறையோ, கொள்கையோ கடைபிடிக்கப்படாமல் அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதல் அலைக் கற்றை ஒதுக்கீடு (Spectrum allocation) செய்யப்பட்டதற்கும் உரிய கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் அலைக் கற்றையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதனை ஒதுக்கீடு செய்வதில் டிராய் என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அந்த அமைப்பிற்காக வாதிட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறினார்.
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி எஸ். முரளிதர் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, இந்த மனுவிற்கு விளக்கமளிக்குமாறு மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட செல்பேசி நிறுவனங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது.