பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும் இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் டிசம்பர் 24ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவரும் டெல்லி முதல்வர் பதவிக்கான அக்கட்சி வேட்பாளருமான வி.கே. மல்கோத்ரா கூறுகையில், பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களர்களை கவரும் வகையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை முறை மீறிய செயல். எனவே இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம் என்றார்.