தெருக்களில் உள்ள உணவு அங்காடிகளின் மூலம் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த பதினேராவது ஐந்தாண்டு திட்டத்தில் பல நடவடிக்கைகளை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சகம் எடுத்துள்ளது.
அதே நேரத்தில், உணவுப் பொருட்களை தெரு அங்காடிகளில் விற்கும் வியாபாரிகளின் நலனை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பான உணவுப் பொருட்களை அளிப்பதற்கு இதற்கான நகரங்களை உருவாக்குவது, தெரு அங்காடிகளில் உணவுப் பொருட்களை சிறந்த முறையில் விற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வது ஆகிய 2 திட்டங்களை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி தெரு அங்காடிகளில் உணவுப் பொருட்களை விற்பவர்களில் 1,000 பேர்களை சில நகரங்களில் இருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி ஆகியவை அளிக்கப்படுகின்றன. அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. 2008-09ஆம் ஆண்டு ஆக்ரா, டெல்லி உட்பட 9 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போதுள்ள உணவு அங்காடிகளை மேம்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. மின் வசதி மற்றும் நவீன மின்சார இயந்திர கருவிகளை வழங்குவது, பாதுகாப்பான குடிநீர் அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். 2008-09ஆம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த திருப்பதி, வாரணாசி ஆகிய 2 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.