பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பானது வாக்காளர்களைக் கவரும் முயற்சி என்று குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்பதால் மத்திய அரசின் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் டெல்லி மாநில முதல்வர் வேட்பாளர் வி.கே. மல்ஹோத்ரா, "பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து வருவதால் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்." என்றார்.
மேலும்,"பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு மத்திய அரசிற்குச் சாதகமாக அமையும் என்பதால், இதுகுறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போகிறோம்." என்றும் மல்ஹோத்ரா கூறினார்.
முன்னதாக, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, "கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. நாங்கள் கண்டிப்பாக எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். ஆனால் 6 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்து வருவதால் தேர்தல் நடத்தை விதிகளைக் கருதி டிசம்பர் 24 ஆம் தேதிக்கு முன்பு நாங்கள் முடிவெடுக்க முடியாது." என்றார்.