சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பில் மறு வாக்குப்பதிவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள மர்டபால் பகுதியில் நேற்று நடைபெற்ற மறு வாக்குப்பதிவிற்குப் பாதுகாப்பளித்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த காவல்துறையினரின் வாகனத்தைக் குறிவைத்து இன்று காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகள் முடிந்து மர்டாபாலில் இருந்து கோண்டாகான் என்ற ஊருக்குக் காவலர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் இருந்த பாலத்தில் குண்டு வெடித்ததாகவும், இதில் 5 காவலர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 11 மணியளவில் நடந்துள்ள இந்தத் தாக்குதலை நக்சலைட்டுகள்தான் நடத்தியுள்ளனர் என்றும், சம்பவ இடத்திற்கு கூடுதல் காவலர்கள் விரைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.