இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக இந்திய, பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சர்கள் தலைநகர் டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் மெக்தூம் ஷா மெஹ்மூட் குரேசி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அப்போது நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பயங்கரவாதம், எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகிய விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிய வர்த்தகம் அண்மையில் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் நாடாக பாகிஸ்தான் இருக்காது என்று அந்நாட்டு அதிபர் ஆஷிப் அலி ஜர்தாரி கடந்த வார இறுதியில் அறிவித்துள்ளது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, இந்திய- பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடக்கிறது குறிப்பிடத்தக்கது.