காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான துணிவு இல்லை என்பதோடு தீவிரவாதிகள் விஷயத்தில் தெளிவான அணுகுமுறையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.
தீவிரவாதிகளின் வன்முறையை ஒடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையின் கீழ் எல்லா மாநிலங்களிலும் சிறப்பு அதிரடிப்படை ஏற்படுத்த வேண்டும். நக்சலைட்கள், தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியை, 100 நாட்களில் சிறப்பு அதிரடிப்படை தொடங்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த காவல் துறை தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்துக் கூறியுள்ள பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி, 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போதுதான் மத்திய அரசு தனது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டுள்ளது என்றார்.
தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போன்ற கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை என்பதை ஆட்சியாளர்களே தற்போது உணர்ந்துள்ளனர் என்று கூறினார்
காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறிய அத்வானி, நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று கூறினார்.
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதிலிருந்து தோல்வியை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான துணிவு இல்லை என்பதோடு தீவிரவாதிகள் விஷயத்தில் தெளிவான அணுகுமுறையும் இல்லை என்றும் அத்வானி கூறினார்.