Publish Date: Tue, 25 Nov 2008 (02:50 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (02:50 IST)
அண்மையில் அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இரு மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பாக விரைவான மற்றும் உண்மையான விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு மாநில முதல்வர்களையும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர், செய்தி சேகரிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹர் என்ற இடத்தில் ஜகஜித் சைகா என்ற பத்திரிகையாளர் சில மர்ம மனிதர்களால் கடந்த சனிக்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் கோன்சம் ரிஷிகந்தா என்ற பத்திரிகை உதவி-ஆசிரியர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.