மாலேகான் குண்டு வெடிப்பில் தனக்குத் தொடர்புள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை மற்றும் திரிக்கப்பட்டவை என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
'மாலேகான் வழக்கில் எனது பெயரைத் தேவையில்லாமல் இழுப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பிரவீன் தொகாடியாவின் வழக்கறிஞர் தீபக் சுக்லா விடுத்துள்ள அறிக்கையில், "அபினவ் பாரத் தொடர்பான மற்றும் அதனுடன் இணைந்த அல்லது அதற்குச் சம்பந்தப்பட்ட யாரும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தனக்குத் தொடர்பில்லை என்றும், தான் எந்தவிதமான நிதியும் வழங்கவில்லை என்றும் எனது கட்சிக்காரர் வன்மையான மறுக்கிறார்." என்று கூறியுள்ளார்.
தொகாடியாவின் பெயரைத் தேவையில்லாமல் ஆதாரமில்லாமல் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இழுக்க முற்படுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுக்லா எச்சரித்துள்ளார்.
மாலேகானில் செப்டம்பர் 29 இல் நடந்த குண்டு வெடிப்பை நடத்தியதாகக் குற்றம்சாற்றப்பட்டுள்ள இந்துத்துவா அமைப்பான அபினவ் பாரத் அமைப்பிற்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நிதியளித்துள்ளார் என்று ஒருபகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அபினவ் பாரத் அமைப்பை உருவாக்குவதிலும், அதன் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் பிரவீன் தொகாடியா உதவியதாக, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மத்தியப் புலனாய்வுக் கழக அதிகாரிகளின் விசாரணையில் தெரிவித்துள்ளார் என்று அந்த ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவித்தன.